பத்து கேவ்ஸ் வட்டாரத்தில் உரிமம் இல்லாத சிறார் காப்பகத்தில் ஐந்து சிறுவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக காப்பகப் பராமரிப்பாளர் ஒருவருக்கு 36 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 6 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
25 வயது ரெட்ன வேலு என்ற அந்த காப்பக பராமரிப்பாளர், அந்த காப்பகத்தில் தங்கியிருந்த 8, 10, 11, 12 மற்றும் 13 வயதுடைய ஐந்து சிறுவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக 9 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.
அம்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட ரெத்னவேலு, தனக்கு எதிரான ஒன்பது குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு இத்தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பர் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சிறார்களுக்கு எதிரான இந்த அத்துமீறல்கள் நடந்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுவர்களின் கண்ணியம் மற்றும் மனநலனை மிகக் கொடூரமாகப் பாதிக்கும் வகையில் இந்தச் செயல் அமைந்துள்ளதால், குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.








