கோலாலம்பூர், ஜனவரி.02-
கோலாலம்பூர், கம்போங் சுங்கை பாருவில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற கட்டட அகற்றும் பணியின் போது, டாங் வாங்கி முன்னாள் காவற் படைத் தலைவர் சுலிஸ்மி அஃபெண்டி சுலைமானைத் தாக்கிக் காயப்படுத்தியதை 16 வயது சிறுவன் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டான். காவல் படை அதிகாரி தன் கடமையைச் செய்யவிடாமல் தடுத்து, அவர் மீது பொருள்களை வீசித் தலையில் காயத்தை ஏற்படுத்தியதாக அந்தச் சிறுவன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து, அவனது நடத்தைப் பற்றிய அறிக்கைக்காகத் தீர்ப்பு வரும் பிப்ரவரி 4-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதை மஜிஸ்திரேட் நுர்ஃபராஹாயின் ரொஸ்லான் தெரிவித்தார்.
அதே சம்பவத்தில் சட்டத்திற்குப் புறம்பாகக் கூடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மற்ற நால்வருக்கு தலா 3 ஆயிரத்து 500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்ட வேளையில், 56 வயது நபர் ஒருவர் மட்டும் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளார். மின்சார இணைப்பு துண்டிப்பு, வீடுகளை இடிக்கும் பணி ஆகியவற்றின் போது ஏற்பட்ட இந்த மோதலில், மூத்தக் காவற்படை அதிகாரி காயமடைந்தது அப்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.








