கிழக்கு கரையோர மாநிலங்களுக்கான ரயில் இணைப்பான இசிஆர்எல்லின் பயணக் கட்டணம் இம்மாதம் அறிவிக்கப்படும் என்றும், டிக்கெட் விற்பனை நவம்பரில் தொடங்கும் என்றும் மலேசியா ரேல் லிங்க் செண்டிரியான் பெர்ஹாட் தெரிவித்துள்ளது.
எம்ஆாரெல் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ ஶ்ரீ டார்விஸ் அப்துல் ரஸாக் கூறுகையில், போக்குவரத்து அமைச்சு கட்டணத்தை அறிவிக்கும் என்றும், இசிஆர்எல் சேவை டிசம்பர் மத்தியில் வணிக ரீதியாகத் தொடங்கும் என்றும் தெரிவித்தார். விமானக் கட்டணத்தைவிடக் குறைவாகவும், பேருந்துக் கட்டணத்தைவிட சற்று அதிகமாகவும் கட்டணம் இருக்கும் என்றார்.
முதல் கட்டமாக திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை தினமும் 12 முறை இருவழிப் பயணங்களும், வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 14 முறை இருவழிப் பயணங்களும் இயக்கப்படும். கோத்தா பாரு-கோம்பாக் வழித்தடத்தின் பணிகள் செப்டம்பர் நிலவரப்படி 98.16 விழுக்காடு நிறைவடைந்துள்ளன.
519 கிலோமீட்டர் தூரத்தை இசிஆர்எல் சோதனை ரயில் 3 மணி 19 நிமிடங்களில் கடந்து, மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தை எட்டியுள்ளது. இசிஆர்எல் செயல்பாட்டுக்கு வந்ததும் கோத்தா பாரு-கோம்பாக் பயண நேரம் சாலைப் போக்குவரத்தின் சுமார் 7 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரமாகக் குறையும்.








