பெட்டாலிங் ஜெயா, ஜனவரி.10-
மலேசிய அரச விமானப்படையைச் சேர்ந்த 20 அதிகாரிகள், விமானப்படைத் தளத்தில் ஒழுங்கீனமான மற்றும் ஒழுக்கமற்ற செயல்களில் நேரடியாக ஈடுபட்டது அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜெனரல் டான் ஶ்ரீ நோராஸ்லான் அரிஸ் தெரிவித்துள்ளார்.
சுபாங் விமானப்படைத் தளத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் இத்தகையச் செயல்கள், விமானப்படையின் கட்டளைகளையும் சட்ட விதிகளையும் மீறிய செயல் என்று நோராஸ்லான் குறிப்பிட்டுள்ளார்.
"குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இராணுவச் சட்டங்களின்படி முறையான விசாரணை நடத்தப்பட்டு, தகுந்த தண்டனை வழங்கப்படுவது உறுதிச் செய்யப்படும். இத்தகைய ஆரோக்கியமற்ற கலாச்சாரங்களுக்கு விமானப்படையில் ஒரு போதும் இடமில்லை," என்று அவர் வலியுறுத்தினார்.
விமானப்படையின் உயர்மட்டத் தலைமைத்துவம், இச்சம்பவத்திற்குத் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. தங்களின் கடமையிலிருந்து தவறிய அதிகாரிகள் எவராயினும் அவர்கள் உரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.
முன்னதாக, ராணுவ முகாம்களுக்குள் அனுமதியற்ற நபர்கள் நுழைந்ததாகவும், அங்கு ஒழுங்கீனமான கேளிக்கைகள் நடைபெற்றதாகவும் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியாகி வைரலாகின.
ஒரு வீடியோவில் ஓர் ஆணும் பெண்ணும் முறையற்ற வகையில் நடந்து கொள்வதும், மற்றொரு வீடியோவில் ஒரு மதுபான விடுதியில் அமர்ந்து மது அருந்துவதும் போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.








