சிப்பாங், ஜூலை.27-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், இந்தியாவுக்கு 73 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள அரிய வகை விலங்குகளைக் கடத்த முயன்ற 38 வயது இந்திய நாட்டவர் நேற்று இரவு அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். மலேசிய எல்லைக் கட்டுப்பாடு - பாதுகாப்பு முகமை ஏகேபிஎஸ்ஸும் கேஎல்ஐஏ விமானப் பாதுகாப்புப் படையும் இணைந்து நடத்திய சோதனையில், சந்தேகத்திற்கிடமான பைகளில் இரண்டு சாம்பல் நிற லங்கூர் குரங்குகள், இரண்டு சியாமாங் குரங்குகள், இரண்டு அழுங்குகள் ஆகிய பாதுகாக்கப்பட்ட இன விலங்குகள் கைப்பற்றப்பட்டன.
இந்த விலங்குகள் உள்நாட்டுச் சட்டங்களின் கீழும் அனைத்துலகச் சட்டங்களின் கீழும் பாதுகாக்கப்படுபவை என்பதால், உயிரியல் பன்முகத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இந்தக் கடத்தல் நடவடிக்கை கடுமையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட அனைத்து விலங்குகளும் தேசியப் பூங்கா, வனவிலங்கு பாதுகாப்புத் துறையான பெர்ஹிலித்தான் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.








