செர்டாங், செப்டம்பர்.29-
பூச்சோங், பத்து 13, டோல் சாவடி அருகில் பெரோடுவா மைவி கார் ஒன்றைச் சுற்றி வளைத்துக் கொண்டு, அக்காரை எட்டி உதைத்துக் கொண்டும், கார் கண்ணாடியைப் பலம் கொண்டு கையால் குத்தியவாறும் அடாவடித்தனம் புரிந்த சுமார் 20 நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
மோட்டர் சைக்கிளில் பயணித்தவாறு இளைஞர் கும்பல் நிகழ்த்திய இந்த அராஜகச் செயல் நேற்று காலை அதிகாலை 4 மணியளவில் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைளத்தளங்களில் வைரலாகியுள்ள வேளையில் பாதிக்கப்பட்ட 52 வயதுடைய நபர், இது குறித்து அன்றைய தினம் இரவு 10 மணியளவில் போலீசில் புகார் செய்து இருப்பதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஃபாரிட் அஹ்மாட் தெரிவித்தார்.
இதர வாகனமோட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட அந்த கும்பலைச் சேர்ந்தவர்களைப் போலீசார் அடையாளம் கண்டு வருகின்றனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று ஃபாரிட் அஹ்மாட் குறிப்பிட்டார்.








