மலேசிய இந்தியர்கள் தங்களது மொழி, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, தாங்கள் வாழும் நாட்டின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என மலேசியாவுக்கான இந்தியத் தூதரகத்தின் பொறுப்பு அதிகாரி ஶ்ரீ ஹிதேஷ் ராஜ்பால் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய சமூகத்தினர் கடின உழைப்பு, நேர்மை, பரஸ்பர மரியாதை மற்றும் நல்லிணக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இன்று இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் உரையாற்றிய அவர், இந்தியாவுடனான தங்களது வேர்களையும் அடையாளத்தையும் பேணுவதுடன், இந்தியா–மலேசியா நட்புறவை வலுப்படுத்தும் முன்மாதிரியான குடிமக்களாகத் திகழ வேண்டும் என்றார்.
மேலும், இந்தியாவின் 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் – என்ற இலக்கை அடைய, அறிவு, தொழில், திறன் மற்றும் சமூக சேவை மூலம் மலேசிய இந்தியர்கள் பங்களிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியா–மலேசியா உறவு தற்போது விரிவான வியூக கூட்டாண்மை என்ற நிலைக்கு உயர்ந்துள்ள நிலையில், குறைக்கடத்திகள், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை, சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு அதிகரித்துள்ளதாகவும் ராஜ்பால் குறிப்பிட்டார்.
மலேசியாவில் சுமார் 27 லட்சத்து 50 ஆயிரம் இந்திய வம்சாவளியினர் வாழ்ந்து வருவது இருநாட்டு மக்களுக்கிடையிலான உறவின் முக்கிய தூணாக இருப்பதாகவும் அவர் கூறினார்.








