புத்ராஜெயா, ஜூலை.26-
ஜோகூர் கடற்பரப்பில் வீற்றிருக்கும் பூலாவ் பத்து பூத்தே தீவு விவகாரத்தில் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது நாட்டிற்குத் துரோகம் இழைத்துள்ளதாக வெளிப்படையாகத் தெரிந்த நிலையில், அவருக்கு எதிராக குற்றத்தன்மையை அரச விசாரணை ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
எனினும், முன்னாள் லங்காவி எம்.பி.யான துன் மகாதீரின் நிலை மற்றும் அவரின் வயதைக் கருத்தில் கொண்டு அவர் மீது வழக்குத் தொடர வேண்டாம் என்று அமைச்சரவை முடிவு செய்ததாக பிரதமர் கூறினார்.
இருப்பினும், பத்து பூத்தே தீவு விவகாரத்தில், துன் மகாதீருக்கு எதிராக இதற்கு முன்பு நாடாளுமன்றத்தில் தாம் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் தம்மை நாடாளுமன்ற சுயேட்சை விசாரணைக் குழு முன்னிலையில் நிறுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் ஒரு தீர்மானத்தைச் சமர்ப்பித்துள்ள நடவடிக்கையானது, நாடாளுமன்ற விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்ட ஒரு நடைமுறையாகும் என்று அன்வார் விளக்கினார்.
துன் மகாதீர் குற்றம் இழைத்துள்ளார் என்று தாம் சொல்லவில்லை. மாறாக, இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட அரச விசாரணை ஆணைக்குழுதான், அந்த முன்னாள் பிரதமர் குற்றம் இழைத்துள்ளார், துரோகம் செய்துள்ளார் என்று பரிந்துரை செய்துள்ளது என்று அன்வார் தெளிவுபடுத்தினார்.








