Dec 26, 2025
Thisaigal NewsYouTube
நஜீப் வழக்கில் தெளிவான தீர்ப்பு: ராய்ஸ் யாத்திம் கருத்து
தற்போதைய செய்திகள்

நஜீப் வழக்கில் தெளிவான தீர்ப்பு: ராய்ஸ் யாத்திம் கருத்து

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.26-

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக்கின் வீட்டுக் காவல் குறித்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, மிகத் தெளிவானது என்று முன்னாள் மேலவை உறுப்பினரும், ஒரு சட்ட வல்லுநருமான டான் ஶ்ரீ ராய்ஸ் யாத்திம், அழகிய விளக்கத்தைத் தனது காணொளியில் வழங்கியுள்ளார்.

நஜீப்பை சிறையிலிருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றக் கோரும் மனுவை உயர்நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை தள்ளுபடி செய்தது.

மன்னிப்பு வாரியத்தின் ஆலோசனையின்றி மாமன்னர் தனிப்பட்ட முறையில் இத்தகைய முடிவை எடுக்க முடியாது என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பு, அரசியலமைப்புச் சட்டத்தின்படி சரியானதே என்று முன்னாள் தகவல் துறை அமைச்சருமான ராய்ஸ் குறிப்பிட்டார்.

இத்தீர்ப்பினால் நஜீப் மற்றும் அவரது குடும்பத்தினர் ஏமாற்றம் அடைந்திருக்கலாம். எனினும், சட்ட நடைமுறைகளை மதித்து பொறுமையுடன் செயல்பட வேண்டும் என்றும், கிடைக்கக்கூடிய எஞ்சிய சட்ட வாய்ப்புகளை மனிதாபிமானத்துடன் அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இவ்வழக்கின் தீர்ப்பு உணர்த்துவது என்னவென்றால், கோன் உட்பட சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை என்பதை உயர் நீதிமன்ற நீதிபதி எலிஸ் லோக் யீ சிங் Alice Loke மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.

மாமன்னரின் அதிகாரம் என்பது தீர்ப்பை ரத்து செய்ய முடியும். அல்லது தீர்ப்பை ஒத்தி வைக்க முடியும். அல்லது தண்டனையைக் குறைக்கச் செய்ய முடியும். அரசியலமைப்பு சட்டத்தின் 42 ஆவது விதி இவற்றை வலியுறுத்துகிறது.

ஆனால், இந்த உத்தரவை பிறப்பிப்பதற்கு மாமன்னர் தன்னிச்சையாகச் செயல்பட முடியாது. அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஏற்ப வீட்டுக் காவல் விவகாரத்தை மன்னிப்பு வாரிய கூட்டத்தில் மாமன்னர் பரிந்துரை செய்து இருக்க வேண்டும். ஆனால், மன்னிப்பு வாரியக் கூட்டத்தில் பேசப்படாமலேயே மாமன்னர் தன்னிச்சையாக முடிவு செய்துள்ளார் என்பதையே நீதிபதியின் தீர்ப்பு உணர்த்துகிறது என்று ராய்ஸ் விளக்கினார்.

எனினும் மாமன்னர் இத்தகைய முடிவு செய்வதற்கு, அவருக்கு ஆலோசனை வழங்கக்கூடிய நிலையில் இருந்த சட்டத்துறை தலைவர், ஏன் அத்தகைய ஆலோசனையை மாமன்னருக்கு வழங்கவில்லை என்று தனது காணொளியில் ராய்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related News