பெந்தோங், ஆகஸ்ட்.09-
மற்ற வாகனமோட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் காரைச் செலுத்தியதாகக் கூறப்படும் வாகனமோட்டி ஒருவர், மற்றொரு நபரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் அந்த நபரைப் போலீசார் கைது செய்து இருப்பதாக பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஸைஹான் முகமட் காஹார் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜாலான் கெந்திங் ஹைலண்ட்ஸ், 10.3 ஆவது கிலோமீட்டரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்ததாகக்
கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி, சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அந்த நபரைப் போலீசார் அடையாளம் கண்டதாக ஸைஹான் குறிப்பிட்டார்.
அந்த நபர், கெந்திங் ஹைலண்ட்ஸிலிருந்து சுபாங் ஜெயாவில் உள்ள தனது வீட்டிற்குக் காரில் திரும்பிக் கொண்டு இருந்த போது, சாலையில் மற்றவரைத் தாக்கி, பெரும் அராஜகம் புரிந்ததாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டுள்ள 24 வயது நபர், தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.








