ஜோகூர் பாரு, ஜூலை.16-
இவ்வாண்டு முற்பகுதியில் ஜோகூர் பாருவில் ஓர் உணவகத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆடவர் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பில் அந்நிய நாட்டைச் சேர்ந்த ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
65 வயதுடைய அந்த நபர், நேற்று மாலை 4.30 மணியளவில் ஜோகூர் பாருவில் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் பாரு செலாத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவுப் செலாமாட் தெரிவித்தார்.
விசாரணைக்கு ஏதுவாக அந்த நபரை 7 நாள் தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற அனுமதியைப் போலீசார் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஜனவரி 8 ஆம் தேதி ஜோகூர் பாரு, தாமான் செத்தியா இண்டாவில் தனது நண்பர்களுடன் அமர்ந்திருந்த 40 வயது மதிக்கத்தக்க ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தனக்கு வந்த தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து அந்த ஆடவர், நண்பர்களிடமிருந்து சற்று ஒதுங்கி, உணவகத்தில் நடந்து கொண்டே பேசிக் கொண்டு இருந்த போது அடையாளம் தெரியாத நபரால் சுடப்பட்டார். நெஞ்சிலும் வயிற்றிலும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் அந்த நபர் உணவகத்திலேயே உயிரிழந்தார்.








