ஷா ஆலாம், ஆகஸ்ட்.20-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பற்றி பொய்யானத் தகவல்களை உள்ளடக்கிய பதிவை, தனது டிக் டாக் கணக்கில் பதிவேற்றம் செய்து பகிரிந்ததாக முன்னாள் ஆசிரியர் ஒருவர் ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
செக்கு சன்ரா என்று பரவலாக அழைக்கப்படும் எஸ். சந்திரசேகரன் என்ற அந்த முன்னாள் ஆசிரியர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி பொய்யான உள்ளடக்கத்தைக் கொண்ட காணொளியை வெளியிட்டதாக 1998 ஆம் ஆண்டு தகவல், தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233 ஆவது பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 50 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது 5 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் சந்திரசேகரன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
நீதிபதி நோர் ஹஸ்னியா ராஸாக் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, சந்திரசேகரனுக்கு எதிராகக் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது, அவர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்.
வழக்கு விசாரணை முடியும் வரையில் ஒரு நபர், உத்தரவாதத்துடன் 7 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனிவில் விடுவிக்க அனுமதிப்பபதாக நீதிபதி நோர் ஹஸ்னியா ராஸாக் தெரிவித்தார்.
மேலும் சந்திரசேகரனின் அனைத்துலகக் கடப்பிதழ் வழக்கு முடியும் வரையில் முடக்கப்பட்டது.
முன்னதாக, குற்றஞ்சாட்டப்பட்ட சந்திரசேகன், ஒரு புற்று நோயாளி என்பதால் குறைந்தபட்ச ஜாமீன் தொகையை விதிக்குமாறு அவரின் வழக்கறிஞர் முகமட்நோர் தம்ரின் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.








