Sep 28, 2026
Thisaigal NewsYouTube
100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா
தற்போதைய செய்திகள்

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

Share:

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட்டின் துணைவியாரான டாக்டர் சித்தி ஹஸ்மா முகமட் அலி இன்று தனது 100 ஆவது வயதில் காலமானார்.

காலை சுமார் 9.20 மணியளவில் தேசிய இருதயக் கழகத்தில் அவரது உயிர் பிரிந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

மகாதீர் பிரதமராக இருந்த காலக்கட்டங்களில், மருத்துவரான சித்தி ஹஸ்மா, பிரதமரின் துணைவி எனத் தமக்குக் கிடைத்த தளத்தை சமூக நலனுக்காகப் பயன்படுத்தி பல்வேறு முக்கிய விவகாரங்களில் தீவிரமாகக் குரல் கொடுத்தவர் ஆவார்.

குறிப்பாக, தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதாரம், குடும்பக் கட்டுப்பாடு, கல்வியறிவு, போதைப்பொருள் தடுப்பு மற்றும் மனநலம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அவர் மிகுந்த கவனம் செலுத்தினார்.

100 ஆண்டுகள் வாழ்ந்த சித்தி ஹஸ்மா, மருத்துவத் துறையிலும் சமூக நலச் செயல்பாடுகளிலும் தனது சிறப்பான பங்களிப்பை வழங்கியவர் ஆவர்.

10 பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் 6-வது பிள்ளையாகப் பிறந்த சித்தி ஹஸ்மா, கிள்ளானில் தனது பள்ளிப் படிப்பைத் தொடங்கி, சிங்கப்பூர் மருத்துவக் கல்வியைத் தொடர்ந்தார். 1955-ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்த அவர், மலேசியாவின் முதல் மலாய் பெண் மருத்துவர்களில் ஒருவராக உருவெடுத்தார்.

இதனிடையே மகாதீரும், சித்தி ஹஸ்மாவும் கடந்த 1947-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் உள்ள கிங் எட்வார்ட் மருத்துவக் கல்லூரியில் மாணவர்களாக இருந்தபோது சந்தித்துக் கொண்டனர்.

பின்னர், இருவரும் 1956-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இத்தம்பதியருக்கு மரினா, மிர்ஸான், மொக்ஸானி, முக்ரிஸ் என 4 பிள்ளைகள் உள்ளனர். மேலும் மெலிண்டா, மஸார், மைஸூரா ஆகிய 3 பிள்ளைகளையும் அவர்கள் தத்தெடுத்தனர்.

சமூகப் பணிகளிலும் அவர் முக்கிய பங்காற்றினார். அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களின் மனைவியர் நல அமைப்பான பக்தி மற்றும் மலேசிய மகளிர் வழிகாட்டிகள் சங்கம் ஆகியவற்றின் தலைவராகவும், கெடா குடும்பக் கட்டுப்பாட்டு சங்கத் தலைவராகவும், பல சுகாதார அமைப்புகளின் ஆதரவாளராகவும் பணியாற்றினார்.

இந்நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்ட மார்பகக் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னர், பெண்கள் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தி வந்தார்.

Related News