மலேசியாவில் முதன்முறையாக உள்நாட்டிலேயே மனிதர்களுக்கான தடுப்பூசி உற்பத்தியில் பார்மாநியாகா பெர்காட் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறை அமைச்சர் சாங் லிக் காங் வெளியிட்டுள்ள தகவலில், இந்த தடுப்பூசி சீன நிறுவனமொன்றிடமிருந்து தொழில்நுட்பப் பரிமாற்றம் மூலம் உற்பத்தி செய்யப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
13-வகை பி.சி.வி.13 எனப்படும் இந்த தடுப்பூசி, ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பியூமோனியே என்ற பாக்டீரியாவால் ஏற்படும் நிமோனியா, மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட கடுமையான நோய்களில் இருந்து பாதுகாப்பு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசியானது 2028-ஆம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இதன் மூலம் தடுப்பூசி இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நிலை குறையும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது மலேசியா மனிதர்களுக்கான அனைத்து வகையான தடுப்பூசிகளையும் அமெரிக்கா, பிரான்ஸ், பெல்ஜியம், ஜப்பான், தென் கொரியா, இந்தியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.








