ஈப்போ, அக்டோபர்.01-
இரண்டு வாரங்களுக்கு முன்பு நாயை, இரும்புத் தடியால் சரமாரியாக அடித்து, துடிக்க – துடிக்கக் கொன்ற ஆடவர் ஒருவருக்கு ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 20 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.
அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் ஒரு மாத சிறைத் தண்டனை விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
23 வயது எம். தேனிஷ்குமார் என்ற அந்த ஆடவர், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் அனிஸ் ஹனினி அப்துல்லா இத்தீர்ப்பினை வழங்கினார்.
சம்பந்தப்பட்ட ஆடவர், நாயை இரும்புத் தடியால் அடித்துக் கொல்லும் காட்சி தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டதைத் தொடர்ந்து அந்த இளைஞரின் செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர்.
கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி இரவு 10.30 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை ஈப்போ, லெபோ கிளேடாங் உத்தாரா, தாமான் அர்கிட் என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் தேனிஷ்குமார் இந்த கொடூரச் செயலைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் ஒரு லட்சம் ரிங்கிட் அபராதம் அல்லது கூடியபட்சம் மூன்று ஆண்டு சிறை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் 2015 ஆம் ஆண்டு விலங்குப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அந்த இந்திய இளைஞர் குற்றஞ்சாட்டப்பட்டார்.








