பேட்டர்சி மின் நிலைய திட்டத்தில் சொத்து மதிப்பு செயற்கையாக அதிகரிக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை இரண்டு தடயவியல் தணிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நாடாளுமன்றத்தில் இன்று வெளியிட்டுள்ள எழுத்துப்பூர்வ பதிலில், விசாரணைகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதால், இந்த விவகாரம் தொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
புச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பி யின் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அன்வார், பேட்டர்சி திட்டத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி டோனா ஓ'சுல்லிவன் முன்வைத்த குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக சுயாதீன தடயவியல் தணிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விளக்கமளித்துள்ளார்.
பேட்டர்சி நிறுவன திட்டத்தின் நிதி அறிக்கைகள் தொடர்பாக எழுப்பப்பட்ட விவகாரங்களை ஆய்வு செய்வதற்காக சுயாதீன தடயவியல் தணிக்கையாளர் ஈவ்லின் பார்ட்னர்ஸ்-ஐ நிறுவனம் நியமித்ததையும் அன்வார் சுட்டிக் காட்டியுள்ளார்.
அந்த ஆய்வின் முடிவுகள், திட்டத்தில் மதிப்பு அதிகரிப்பு அல்லது நிதி முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியதாக அன்வார் தமது எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
பேட்டர்சி மின் நிலையம் என்பது லண்டனில் உள்ள 42 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு புனரமைப்புத் திட்டமாகும். இதன் முதன்மை பங்குதாரர்களில், மலேசிய ஊழியர் சேமநிதியான ஈ.பி.எஃப் உட்பட, அரசாங்கத்துடன் தொடர்புடைய முக்கிய முதலீட்டு நிதிகள் அடங்கியுள்ளன.
அதேவேளையில், பெர்மோடாலான் நேஷனல் பெர்ஹாட் நிறுவனமும் இந்த புகழ்பெற்ற கட்டிடத்தில் முக்கிய வணிகப் பங்குகளைக் கொண்டுள்ளது.








