ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான 56 வேட்பாளர்களின் பட்டியலை பாரிசான் நேஷனல் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் கூட்டணி சார்பில் போட்டியிடப் போகும் வேட்பாளர்கள் யார் என கடந்த சில வாரங்களாக நிலவி வந்த எதிர்பார்ப்புகளுக்கும் யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நேற்று வெளியிடப்பட்ட பட்டியலின் படி, புதிய முகங்களும் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
பாரிசான் நேஷனலின் முக்கிய கூட்டணிக் கட்சிகளான அம்னோ, மசீச மற்றும் மஇகா ஆகிய கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இது குறித்து ஜோகூர் மாநில பாரிசான் தலைவர் டத்தோ ஆன் ஹஃபிஸ் காசி கூறுகையில், புதிய தலைமுறையினருக்கு வாய்ப்பு அளிப்பதுடன், தேர்தல் அனுபவம் கொண்ட தலைவர்களின் பங்களிப்பையும் உறுதி செய்யும் வகையில் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன் படி, செரோம் தொகுதியில், லேடாங் புத்ரி அம்னோ தலைவரான நாதிரா அபிகா அப்துல் ரஹிம்-ஐ அம்னோ களமிறக்கியுள்ளது.
அதேவேளையில், மசீச இளைஞர் பிரிவின் மத்திய செயற்குழு உறுப்பினரான சீ ஆன் கியாப், ஜெமந்தா தொகுதியில் முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்குகிறார்.
மேலும், மஇகா சார்பில் 29 வயதான வி. ருகேந்திரன் கஹாங் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாரிசான் அணியில் இளம் வயதுடைய வேட்பாளர்களில் ஒருவரான அவர், ஜோகூரில் இளம் தலைமுறையினருக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற மஇகாவின் முயற்சியை பிரதிபலிப்பதாகக் கருதப்படுகிறது.
அதேவேளையில், கெமெலா தொகுதியில் ஆர் ரவின் குமார், பெர்லிங் தொகுதியில் பன்னீர் செல்வம், புக்கிட் பத்து தொகுதியில் ஆர் குமரன் ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஜோகூர் மாநிலத் தேர்தலானது வரும் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இதற்கான வேட்புமனுத் தாக்கல் வரும் ஜூன் 27-ஆம் தேதியும், முன்கூட்டியே வாக்களிப்பானது ஜூலை 7-ஆம் தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.








