மலேசியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 1.85 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்படவுள்ளதாக சுற்றுலா, கலை மற்றும் கலாச்சாரத்துறை துணை அமைச்சர் சியூ சூன் மான் தெரிவித்துள்ளார்.
சாஃப்ட்பேங்க் குழுமம், கிராப் நிறுவனம் மற்றும் சரவாக் பெட்ரோலிய நிறுவனமான பெட்ரோஸ் (PETROS) ஆகியவை இணைந்து இந்த முதலீட்டுத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, மலேசியாவில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 15 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார். இதன் மூலம் சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் தரவு மையங்கள் உருவாக்கப்படுவதுடன், ஆண்டுதோறும் 37 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சீன முதலீட்டாளர்கள் குழுவும் மலேசியாவில் 15 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டியுள்ளதாக சியூ சூன் மான் கூறினார்.
மின்சாரம் மற்றும் மின்னணுவியல், குறைக்கடத்தி தொழில்நுட்பம், டிஜிட்டல் பொருளாதாரம், உணவு பதப்படுத்துதல், சுகாதாரத் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட ஆறு முக்கிய துறைகளில் இந்த முதலீடுகள் கவனம் செலுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளால் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2026ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் 5.7 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளதாகவும், இரண்டாவது காலாண்டில் மட்டும் 6 விழுக்காடு வளர்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தவும், அதிகமான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் மடானி அரசாங்கம் தொடர்ந்து பாடுபடும் என்றும் மீரி நாடாளுமன்ற உறுப்பினருமான சியூ சூன் மான் உறுதியளித்தார்.








