அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர், சுமார் 3 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் கேட்டுப் பெற்றதாகச் சந்தேகத்தின் பேரில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மின்சார துணை மின் நிலையங்களில் சாலைப் பராமரிப்புப் பணிகளுக்கான 95 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான திட்டங்களைப் பெற்றுத் தருவதற்கு உதவியாக, ஒப்பந்த நிறுவனத்தின் இயக்குநரிடம் அவர் லஞ்சம் பெற்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
40 வயதைக் கடந்த அந்த ஆடவர், நேற்று நண்பகல் சிலாங்கூர் ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானபோது கைது செய்யப்பட்டார்.
2023 முதல் 2025ஆம் ஆண்டு வரை கொள்முதல் மற்றும் ஒப்பந்ததாரர் நியமனம் தொடர்பான ஆவணங்களைப் பயன்படுத்தி இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், இடைத்தரகர்களாகச் செயல்பட்ட சில நிறுவனங்கள் மூலம் காசோலைகளாக லஞ்சப் பணம் வழங்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இதையடுத்து, சந்தேக நபரை வரும் நவம்பர் 16ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு 2009ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.








