ஈப்போ, செப்டம்பர்.10-
பேரா மாநில இஸ்லாமிய சமயப்பள்ளிகள் கட்டுப்பாடு சட்டத் திருத்த மசோதா, இன்று மாநில சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
எட்டு பாகங்கள் மற்றும் 30 உட்பிரிவுகளைக் கொண்ட இந்த மசோதாவை நேற்று மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ சரானி முகமட் தாக்கல் செய்தார். பின்னர் அது சட்டமன்ற உறுப்பினர்களால் விவாதிக்கப்பட்டது.
இவ்விவாதத்தில், அரசாங்கத் தரப்பிலிருந்து 5 சட்டமன்ற உறுப்பினர்களும், எதிர்க்கட்சியிலிருந்து 10 சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
இந்நிலையில், இறுதியாக சபாநாயகர் டத்தோ முகமட் ஸாஹிர் அப்துல் காலிட், இம்மசோதா அதன் இரண்டாவது மற்றும் மூன்றாவது வாசிப்புகளில் அவையின் முழு ஆதரவுடன் அங்கீகரிக்கப்பட்டதாக அறிவித்தார்.








