கோலாலம்பூர், செப்டம்பர்.12-
போலீசாருக்கும் கம்போங் சுங்கை பத்து மக்களுக்கும் இடையில் ஏற்பட மோதலால் காவல் துறைத் தலைவர் ஏசிபி சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான் தாக்கப்பட்டு இரத்தக் கரையுடன் தோன்றிய காட்சி உலக ஊடகங்களில் பரவியதைப் பார்த்து தாம் மிக வருந்துவதாக முன்னாள் துணை அமைச்சர் டான் ஶ்ரீ க. குமரன் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம், நட்டிற்கே தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய வன்முறைகளைத் தொடர விடாமல் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று குமரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து உடனடியாக விசாரனை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறு ஆணையிட்டிருப்பதுடன், “தூண்டுதல் வெறுப்பு மற்றும் தவறான தகவல்கள் மூலம் விதைக்கப்படும் வன்முறை சமூகத்தில் வேரூன்ற ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது” என்ற பிரதமர் அன்வார் இப்ராஹிமின் எச்சரிக்கையைத் தாம் வரவேற்பதாக குமரன் ஓர் அறிக்கையில் கூறினார். கடந்த ஆகஸ்ட் 31-இல் ஈப்போவில் நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்பில் மேன்மை தங்கிய பேரா சுல்தான் அவர்களை நோக்கி ஒரு பெண் ஓடி வருவதும், அவரைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்துவதும், சில வன்முறை நோக்கம் கொண்டவர்கள் அந்நபரை சீன இனத்தைச் சேர்ந்தவர் என்ற வதந்தியை பரப்ப முயன்றதையும் கருத்தில் கொண்டுதான் நம் பிரதமர் தவறான தகவல்கள் மூலம் விதைக்கப்படும் வன்முறை சமூகத்தில் வேரூன்றக் கூடாது என்ற எச்சரிக்கை விடுத்துள்ளார்.
1969-ஆம் ஆண்டு மே 13 கலவரத்தை நேரில் பார்த்தவன். அனுபவித்தவன். அக்கலவரத்திற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று தவறானா தகவல் பரவியதுதான். அதனால் நாடு அடைந்த பின்னடைவை அளவிட முடியாது என்று நினைவு கூர்ந்த குமரன், நாட்டை மறு சீரமைப்புச் செய்து, நன் குடிமக்களை உருவாக்க புதிய பொருளாதாரக் கொள்கையும் ருக்குன் நெகாரா என்ற தேசிய கோட்பாட்டையும் அன்றைய அரசு நடமுறைப்படுத்தியது. மலேசியாவில் உள்ள பல்வேறு இனங்களுக்கு இடையில் ஒற்றுமையும் புரிந்துணர்வும் வலுப்பெற்று நல்லிணக்கத்துடன் வாழ்ச் செய்வதே அதன் நோக்கமாகும்.
ருக்குன் நெகாரா கோட்பாட்டு நன்னெறிகள் மறக்கப்பட்டு மக்களிடையே வன்முறைகள் பெருக ஆரம்பித்ததன் அறிகுறியே கம்போங் சுங்கை பாரு இரத்த வெறிச் சம்பவம் நமக்குக் கற்பிக்கும் படமாகும்.
1969 ஆம் ஆண்டில் ஆரம்பப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை கொண்டு செல்லப்பட்ட இந்த நன்நெறிக் கல்வி, நல்ல குடிமக்களை உருவாக்கி இருக்க வேண்டும். அதற்கு மாறாக நமக்கு, நாட்டிற்கு பாதுகாப்பு அளிக்கச் சேவையாற்றும் அதிகாரியை இரத்தம் சிந்த வைத்தச் செயலைப் பார்க்கும் போது கொடுமையான இந்த வன்முறை எவ்வாறு உருவானது என்பதைச் சிந்திக்க வேண்டும் என்று குமரன் கேட்டுக் கொண்டுள்ளார்.








