கோலாலம்பூர், செப்டம்பர்.18-
கோலாலம்பூரிலிருந்து கோத்தா கினபாலுவுக்குச் சென்ற MH2610 என்ற விமானத்தை முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே இயக்கியதன் மூலம் மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளது.
விமானிகள், விமானப் பணிப்பெண்கள், முகவர்கள், பொறியாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட அவ்விமானம் புறப்படத் தேவையான அத்தனைப் பணிகளும் பெண் ஊழியர்களால் மட்டுமே நிர்வகிக்கப்பட்டுள்ளது.
விமானத் துறையில் இந்த மைல் கல்லானது பெண்களின் வலிமை, நிபுணத்துவம் மற்றும் தலைமைத்துவத்தைப் பிரதிபலிக்கிறது என்று மலேசியா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
அதே வேளையில், மலேசிய விமானப் போக்குவரத்துக் குழுமத்தைச் சேர்ந்த பணியாளர்களில், தற்போது பெண்கள் 36 சதவிகிதம் உள்ளதாகவும், இது சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் பாலின பன்முகத்தன்மை முயற்சியின் எண்ணிக்கையை விட அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சாதனை தற்போது விமானப் போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், எதிர்காலத்தில் இப்பணியில் சேர நினைப்பவர்களுக்கும் ஓர் ஊக்கமாக இருக்கும் என்றும் மலேசிய ஏர்லைன்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.








