கோலாலம்பூர், ஜனவரி.10-
கடந்த இரண்டு ஆண்டுகளில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் உள்ளிட்ட அமலாக்கத் துறையினர், நாட்டின் முக்கியப் புள்ளிகள் மற்றும் முன்னாள் தலைவர்களுக்கு எதிராக மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று வெகுவாகப் பாராட்டினார்.
கடந்த இரு ஆண்டுகளில், முன்னாள் பிரதமர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் போன்ற "பெரிய தலைவர்கள்" மீது ஊழல் தடுப்பு ஆணையம், உள்நாட்டு வருமான வரி வாரியம் மற்றும் குடிவரவுத் துறை ஆகியவை மேற்கொண்ட நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை எனப் பிரதமர் தெரிவித்தார்.
அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணிக்கப்படுவதாகவும், முறைகேடுகள் எங்கு நடந்தாலும் சமரசம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மலேசியாவில் ஊழல் என்பது வெறும் பொதுவான சிக்கலாக இல்லாமல், அது பெருவாரியான பாதிப்பாக உள்ளது. இதனை வேரறுக்க இன்னும் கடுமையான முயற்சிகள் தேவை என்று பிரதமர் வலியுறுத்தினார்.
உலுகிள்ளானில் உள்ள தேசிய மிருக்காட்சிச் சாலைக்கு இன்று வருகைப் புரிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.








