Jul 25, 2026
Thisaigal NewsYouTube
பகாங் அருகே கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட 6 இந்திய இளைஞர்கள் பலி
தற்போதைய செய்திகள்

பகாங் அருகே கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட 6 இந்திய இளைஞர்கள் பலி

Share:

பகாங் மாநிலம், ஜாலான் காராக் லாமா சாலையில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில், டொயோட்டா விஇயோஸ் கார் மீது ஒரு டன் லாரி மோதியதில், இரண்டு சிறுவர்கள் உட்பட ஆறு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

கிளினிக் தேசா ஜம்பு ரியாஸ் அருகே, தெமர்லோ நோக்கிச் செல்லும் சாலையில் அதிகாலை 4.25 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

15 முதல் 25 வயதுக்குட்பட்ட ஆறு பேரும் டொயோட்டா விஇயோஸ் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ஏற்பட்ட கடுமையான விபத்தில் காருக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதற்கட்டத் தகவல்கள் கூறுகின்றன.

இது குறித்து Pahang மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை இயக்குநர் டத்தோ முகம்மது ரசாம் தாஜா ரகீம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகாலை 4.24 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து காராக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

முதல் மீட்புக் குழுவானது அதிகாலை 4.32 மணிக்கு அங்கு சென்றபோது, டொயோட்டா விஇயோஸ் கார், ஒரு டன் லாரியுடன் மோதியிருப்பது தெரிய வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்தவர்கள் 25 வயதான வி. முகிலன், 21 வயதான கே. தினேஷ்வரன், 20 வயதான கே. உலகநாதன், 18 வயதான ஏ. கனபதி ராஜா, எஸ்.கே. கிளிய்சன். 16 வயதான கிளிய்சன் மற்றும் 15 வயதான எம். பரந்தாமன் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

இவ்விபத்தில் லாரி ஓட்டுநரான முகம்மது அனாபி அகமது ராஜூ காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.

Related News