கோலாலம்பூர், ஆகஸ்ட்.01-
சந்தாதாரர்கள் தங்களின் பணி ஓய்வுக்குப் பிறகு மாதாந்திர ஓய்வூதியத் தொகையைத் தங்களின் பென்சன் சேமிப்புத் திட்டத்திலிருந்து பெறுவதற்கு அரசாங்கம் முன்வைத்துள்ள பரிந்துரையை ஆராய்வதற்கு தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஃஎப் தயாராக இருக்கிறது என்று அந்த வாரியம் அறிவித்துள்ளது.
சந்தாதாரர்கள் தங்களின் அந்திய காலத்தில் போதுமான சேமிப்பு இல்லாமல் இருப்பதைத் தடுப்பதற்கு இபிஃஎப்பில் பணி ஓய்வுக்கான பென்சன் திட்டம் என்ற புதிய கணக்கைத் தொடங்குவதற்கு அரசாங்கம் பரிந்துரை செய்துள்ளது.
நேற்று நாடாளுமன்றத்தில் 13 ஆவது மலேசியத் திட்டத்தை தாக்கல் செய்த பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், இபிஃஎப் சந்தாதாரர்களின் நிரந்தரச் சேமிப்பு கணக்கில் பணி ஓய்வு சேமிப்பு மற்றும் பணி ஓய்வு பென்சன் திட்டம் என்று இரண்டு கணக்குகளாகப் பிரிப்பதற்கானப் பரிந்துரையை முன் வைத்துள்ளார்.
இதன் மூலம் சந்தாதாரர்களுக்குப் பிடித்தம் செய்யப்படும் சந்தாப் பணம், அவர்களின் இரண்டு கணக்குகளில் வரவு வைக்கப்படும். பணி ஓய்வுக்குப் பிறகு அவர்களுக்கு மாதம் தோறும் இபிஃஎப், பென்சன் பணத்தை வழங்குவதற்கு இத்திட்டம் வகை செய்கிறது.
சந்தாதாரர்களின் நீண்ட கால அனுகூலத்திற்கு வகை செய்யும் இந்தத் திட்டத்தை ஆராய இபிஃஎப் தயாராக இருக்கும் அதே வேளையில் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமானக் கடிதத்திற்காகக் காத்திருப்பதாக அந்த வாரியம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








