புத்ராஜெயா, அக்டோபர்.17-
மலேசியாவில் 16 வயதுக்குக் கீழ்பட்டவர்கள், விவேகக் கைப்பேசியைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் மத்தியில் பகடிவதை, வன்முறைக் குற்றச்செயல்கள் உட்பட பள்ளிகளில் பாதுகாப்புப் பிரச்னையை உடனடியாகக் கையாளும் முயற்சியாக 16 வயது மற்றும் அதற்கு கீழ்பட்டவர்கள் விவேகக் கைப்பேசியைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பது குறித்து ஆராயப்படும் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
அமைச்சரவை முன்மொழிந்த மூன்று உடனடி நடவடிக்கைகளில் இந்த உத்தேசத் திட்டமும் ஒன்றாகும் என்று பிரதமர் கூறினார்.
சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் சில வேளைகளில் மாணவர்கள் மத்தியில் பல குற்றச்செயல்கள் நிகழ்வதற்குப் பெரும் உந்துதலாக உள்ளது என்பதைத் தாங்கள் கண்டறிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எனவே 16 வயது மற்றும் அதற்கு கீழ்பட்டவர்கள் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பதற்கான நடவடிக்கையை அரசாங்கம் செயல்படுத்தவிருக்கிறது.
இது தொடர்பாக ஆய்வுகள் நடந்து வரும் வேளையில் பல நாடுகள் இந்த நடவடிக்கையை அமல்படுத்தியிருப்பதையும் டத்தோ ஶ்ரீ அன்வார் சுட்டிக் காட்டினார்.
இன்று புத்ராஜெயா, செருலிங்கில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
பள்ளிகளில் நிகழ்ந்து வரும் பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்திலும், அவசரத்திலும் இருப்பதையும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.
இவ்விவகாரம் தொடர்பாக நேற்று வியாழக்கிழமை கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக்குடன் ஒரு சிறு கலந்துரையாடல் நடத்தப்பட்டதையும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.