Aug 26, 2026
Thisaigal NewsYouTube
14 வயது மாணவி உயிரிழந்த சம்பவம்: மரண விசாரணை நடத்தப்பட வேண்டுமென முன்னாள் அமைச்சர் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

14 வயது மாணவி உயிரிழந்த சம்பவம்: மரண விசாரணை நடத்தப்பட வேண்டுமென முன்னாள் அமைச்சர் வலியுறுத்து

Share:

செதாப்பாக் பகுதியில் 14 வயது மாணவி உயிரிழந்த சம்பவம் சந்தேகத்திற்கிடமான வகையில் உள்ளதால், அவரது மரணம் குறித்து மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் சட்ட மற்றும் நிறுவன சீர்திருத்த துணை அமைச்சர் ராம்கர்பால் சிங் வலியுறுத்தியுள்ளார்.

பள்ளியில் தன்னை சிலர் துன்புறுத்துவதாக அம்மாணவி தனது தாயிடம் தெரிவித்திருந்ததாக கூறப்படும் நிலையில், அவரது மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிந்து குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க நீதிமன்ற விசாரணை அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவர்கள் துன்புறுத்தப்பட்டதில் மரணம் மற்றும் கடுமையான காயங்கள் ஏற்பட்ட சம்பவங்கள் ஏற்கெனவே நடந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ராம்கர்பால் சிங், 2017ஆம் ஆண்டு டி. நவீன் மற்றும் சுல்பார்ஹான் ஓஸ்மான் சுல்கார்னைன், 2016ஆம் ஆண்டு முஹம்மத் அலிஃப் சுல்தான் அலியாஸ் ஆகியோரின் மரணச் சம்பவங்களும், 2014ஆம் ஆண்டு Sarawak-ல் பள்ளி மாணவி ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவமும் அடங்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி மாணவி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுவரை 90-க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உயிரிழந்த மாணவியின் மூத்த சகோதரியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சந்தேகத்தின் பேரில், அம்மாணவியின் தாயாரின் 51 வயது காதலர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் மாவட்ட போலீஸ் தலைவர் ஃபாடில் மார்ஸுஸ் தெரிவித்துள்ளார்.

Related News