ஷா ஆலம் தாமன் ஆலம் மெகா பகுதியில், இரு கும்பலுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இந்திய ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் சாருடின் சமாத் கூறுகையில், இச்சம்பவமானது நேற்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் நடந்ததாகவும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், கும்பல் ஒன்று ஒருவருக்கொருவர் வெட்டுக்காயம் ஏற்படுத்தும் வகையில் தாக்கிக் கொண்டது தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, நீல நிற பெரோடுவா அல்ஸா கார் ஒன்று சந்தேகநபர்களில் ஒருவரை மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் சாருடின் சமாத் தெரிவித்துள்ளார்.
மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்ற சந்தேகநபர்களை கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஷா ஆலம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளையில், இச்சம்பவமானது குற்றவியல் சட்டம் 302 ஆவது பிரிவின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 40 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், குறைந்தபட்சம் 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.








