குளுவாங், தாமான் திதிவங்சா பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடு தீப்பிடித்து எரிந்ததில், 49 வயது பெண் மற்றும் அவரது இரு மகன்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேற்று இரவு சுமார் 10.44 மணியளவில் தீ விபத்து குறித்து அவசர அழைப்பு கிடைத்ததாக குளுவாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
உடனடியாக 14 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அவர்கள் அங்கு சென்ற போது, இரண்டு மாடி வீடு சுமார் 50 சதவீதம் தீயில் எரிந்த நிலையில் இருந்தது.
வீட்டுக்குள் சிக்கியிருந்த மூவரையும் மீட்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதிலும், சம்பவ இடத்திலேயே மருத்துவப் பணியாளர்கள் அவர்கள் உயிரிழந்து விட்டதாக உறுதி செய்தனர்.
உயிரிழந்தவர்கள் 49 வயதான நோராய்னி இப்ராஹிம் மற்றும் அவரது மகன்களான 18 வயதான கைருல் நூர்ஹாஃசிக் கைருல்நிஸாம், 11 வயதான கைருல் நூர்ஹாடிஃப் கைருல்நிஸாம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.








