சிலாங்கூர் மாநிலம், போர்ட் கிள்ளான், பூலாவ் இண்டா மற்றும் பண்டார் சுல்தான் சுலைமான் தொழிற்பேட்டைகளில் உள்ள மோட்டார் சைக்கிள் பேட்டரி தொழிற்சாலை மற்றும் கிடங்குகளில் சிலாங்கூர் குடிநுழைவுத் துறை நடத்திய அதிரடி சோதனையில் 197 சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.
மொத்தம் 210 பேரிடம் சோதனை நடத்தப்பட்டதில், 20 முதல் 45 வயதுக்குட்பட்ட 147 ஆண்கள், 50 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் மியன்மார் நாட்டைச் சேர்ந்த 102 பேர், இந்தியாவைச் சேர்ந்த 77 பேர், வங்காள தேசத்தைச் சேர்ந்த 9 பேர், இலங்கையைச் சேர்ந்த 4 பேர், பாகிஸ்தானைச் சேர்ந்த 3 பேர் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் உதவியாளர்கள் மற்றும் பொதுத் தொழிலாளர்களாக பணியாற்றியவர்கள் என நம்பப்படுகின்றது.
அவர்களிடம் அடையாள ஆவணங்கள் இல்லாதது, விசா விதிமுறைகளை மீறியது மற்றும் அனுமதிக்கப்பட்ட காலத்தைத் தாண்டி நாட்டில் தங்கியிருந்தது உள்ளிட்ட குடிநுழைவு குற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக விசாரணைக்காக செமிஞ்சி குடிநுழைவு தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்தச் சோதனை நடவடிக்கையில் குடிநுழைவுத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த 62 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.








