நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் ராஜினாமா கடிதம் அளித்ததாக வெளியான தகவலை அம்னோ தலைவரும், துணைப் பிரதமருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் இன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நெகிரி செம்பிலானில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி சூழல் காரணமாக இஸ்மாயில் லாசிம் ராஜினாமா கடிதம் வழங்கியதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல என்று தெரிவித்தார்.
மேலும், துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரை பதவியில் இருந்து நீக்கக் கோரும் பிரகடனத்தில் இஸ்மாயில் கட்டாயப்படுத்தப்பட்டு கையெழுத்திட்டதாகக் கூறப்படும் சந்திப்பில் தாம் பங்கேற்கவில்லை என்றும் அஹ்மாட் ஸாஹிட் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தைக் கையெழுத்தின் போது உடனிருந்த வழக்கறிஞர்களே உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், அம்னோ, அரச குடும்பத்தையும் நெகிரி செம்பிலான் உண்டாங் அமைப்பையும் எப்போதும் மதித்து வருவதாகவும் ஸாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தாம் வற்புறுத்தலின் பேரிலேயே துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரை பதவியில் இருந்து நீக்கக் கோரும் பிரகடனத்தில் கையெழுத்திட்டதாகத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக இஸ்மாயில் லாசிம் போலீசிலும் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








