கோலாலம்பூரில் இருந்து இந்தியாவின் டில்லி நகருக்குப் பயணித்த மலேசிய பெண் ஒருவர், சுமார் 2.25 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 15 கிலோ கஞ்சாவை கடத்த முயன்றதாக இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி டில்லியில் இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் இச்சம்பவம் நடந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.
விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்து கொண்ட அப்பெண்ணை, கூடுதல் சோதனைகளுக்கு உட்படுத்திய அதிகாரிகள், அவரது பயணப் பெட்டியில் இருந்து 30 பிளாஸ்டிக் பைகளில் மொத்தம் 15 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா மறைத்து வைத்திருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
இதனையடுத்து, போதைப்பொருள் வைத்திருத்தல், கடத்தல், இறக்குமதி உள்ளிட்ட குற்றங்களுக்கான 1985 NDPS சட்டத்தின் கீழ் அப்பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.








