முன்னாள் வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஸுரைடா கமாருடின் உள்ளிட்ட மூவர், ஜசெக ஆலோசகர் லிம் குவான் எங்கிற்கு 50 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று ரத்து செய்தது.
மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஸுரைடா கமாருடின், மலேசியா நாவ் ஆசிரியர் அப்டார் ரஹ்மான் கோயா மற்றும் எம்நாவ் மேடியா செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனம் ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை ஒருமனதாக அனுமதித்தது.
லிம் குவான் எங் தாக்கல் செய்த குறுக்கு மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டதுடன், அவர் 30 ஆயிரம் ரிங்கிட் வழக்குச் செலவாக செலுத்த நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.
இத்தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஃபிருஸ் ஜாஃப்ரில், சம்பந்தப்பட்ட கட்டுரையில் லிம் குவான் எங் கூறியபடி அவதூறான கருத்துகள் இடம் பெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் உயர்நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில் வெளிப்படையான பிழைகள் இருப்பதாகவும், தற்காப்பு வாதம் முறையாக பரிசீலிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் 7-ஆம் தேதி, ஷா ஆலாம் உயர்நீதிமன்றத்தில், லிம் குவான் எங்கால் தொடரப்பட்டது.
சிலாங்கூர் மாநிலம் பெஸ்தாரி ஜெயா முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டம் தொடர்பாக ஸுரைடா தம்மைப் பற்றி பொய்யான கருத்துகளை தெரிவித்ததாக லிம் குற்றஞ்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








