இந்தியாவைச் சேர்ந்த அறுபதுக்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பேராளர்கள் தொடர்பு மற்றும் இலக்கவியல் துணையமைச்சர் தியோ நி சிங் னை நாடாளுமன்றத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
அமைதிப் பேச்சுக்கள், கொள்கைப் பரிமாற்றம், அரசியல் புரிதல், சமூக வலைத்தளங்களில் இளைஞர்களின் பங்கு, தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சின் அடுத்த கட்ட நகர்தல் மற்றும் பலதரப்பட்ட விளக்கங்களை துணையமைச்சர் தியோ நி சிங், இச்சந்திப்பில் போது மாணவர்கள் மற்றும் பேராளர்களுக்கு வழங்கினார்.
“தற்போதைய இளைஞர்களுக்கு சமூக வலைத்தளங்களில் சொந்த கருத்துகளை பகிர்வதற்கான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த சுதந்திரம், சரியான முறையிலும், பிறருக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் அனைவரும் பயன்படுத்தப்பட வேண்டும்” என்று கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ நி சிங் வலியுறுத்தினார்.
ஆசிய காமன்வெல்த் நாடுகளுக்கான மக்கள் நல மேம்பாட்டு அமைப்பு, Audacious Dreams அறக்கட்டளையுடன் இணைந்து இந்தியா-மலேசியா இளைஞர் பரிமாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான உலகளாவிய புரிதல் பற்றிய ஆய்வை மேற்கொள்ள கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை மலேசியாவிற்கு பயணத்தை மேற்கொண்டது.
இப்பயணத்தின் ஒரு பகுதியாக இவர்கள் துணையமைச்சர் தியோ நி சிங் கை சந்தித்ததோடு, நாடாளுமன்றத்திற்கும் சிறப்பு பயணத்தை மேற்கொண்டனர்.
இப்பயணம், மலேசியாவின் 66-வது தேசிய தின கொண்டாட்டத்துடன் இணைந்து மலேசியர்களின் பன்முகத்தன்மை, கலாச்சாரம் மற்றும் சுதந்திரப் பயணத்தை தெரிந்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இம்மாதிரியான இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து விரிவுபடுத்தப்படுவதுடன், இன்னும் அதிகமாக ஏற்பாடு செய்யப்பட்ட வேண்டும் என தியோ நி சிங் நம்பிக்கை தெரிவித்தார்.










