கோத்தா கினபாலு, செப்டம்பர்.04-
சபாவில் முதலாம் படிவ மாணவி, ஸாரா கைரினா மகாதீர், தாம் தங்கியிருந்த பள்ளி ஹாஸ்டலின் முதலாவது மாடியிலிருந்து தவறி விழுந்திருக்கவோ அல்லது மற்றவர்களால் தள்ளப்பட்டோ விழுந்திருக்க சாத்தியம் இல்லை என்று சவப் பரிசோதனை நிபுணர் ஒருவர், கோத்தா கினபாலு, மரண விசாரணை நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.
அந்த மாணவி விழுந்த இடத்தில் நடைபெற்ற சோதனையில் மாணவர்கள் தங்கும் விடுதியில் ஒவ்வொரு மாடியின் நடைப்பாதையில் தடுப்புச் சுவர் உள்ளது. அதன் மீது கம்பிகள் இடப்பட்டுள்ளன. எனவே ஒருவர் தவறி விழுவதற்கோ, அல்லது மற்றவர்களால் தள்ளிவிடவோ சாத்தியம் இல்லை என்று ஸாரா கைரினா உடலில் சவப் பரிசோதனை நடத்திய நிபுணரான 58 வயது மருத்துவர் டாக்டர் ஜெஸ்ஸி ஹியூ சாட்சியம் அளித்தார்.
மரண விசாரணை நீதிபதி அமீர் ஷா அமீர் ஹசான் முன்னிலையில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் முதலாவது சாட்சியான டாக்டர் ஜெஸ்ஸி ஹியூ தமது சாட்சியத்தில் மேற்கண்டவாறு கூறினார்.
தாம், கடந்த 1998 ஆம் ஆண்டிலிருந்து கோத்தா கினபாலு குயின் எலிஸபெத் மருத்துவமனையில் தடயவியல் பிரிவின் சவப் பரிசோதனை நிபுணராகப் பணியாற்றி வருவதாக டாக்டர் ஜெஸ்ஸி ஹியூ குறிப்பிட்டார்.








