கோலாலம்பூர், டிசம்பர்.26-
2.8 பில்லியன் ரிங்கிட் முறைகேடு சம்பந்தப்பட்ட 1எம்டிபி வழக்கில் முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக் குற்றவாளியே என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நிதி முறைகேடு தொடர்பில் 72 வயது நஜீப்பிற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட 21 குற்றச்சாட்டகள் மீதான வலுக்கில் 4 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றம் புரிந்துள்ளார் என்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ கோலின் லாரன்ஸ் செகுஏரா தெரிவித்தார்.
பொது நிதியைச் சொந்த நலனுக்குப் பயன்படுத்தும் அளவிற்கு பிரதமர், நிதி அமைச்சர், 1எம்டிபி நிறுவனத்தின் ஆலோசகர் என்ற மூன்ற பதவிகளை நஜீப் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்று டத்தோ கோலின் லாரன்ஸ் குறிப்பிட்டார்.
SRC International நிதி முறைகேடு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு தற்போது காஜாங் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் நஜீப்பிற்கு எதிரான இந்த 1எம்டிபி வழக்கு, கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ கோலின் லாரன்ஸும் பதவி உயர்வு பெற்று, தற்போது புத்ராஜெயா அப்பீல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
சுமார் 2.22 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நிதி முறைகேடுகளில், அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றித் தனது வழக்கை நிரூபித்துள்ளதாக நீதிபதி சுட்டிக் காட்டினார்.
தனது வங்கிக் கணக்கில் இருந்த பணம் சவுதி அரேபிய மன்னர் வழங்கிய அரசியல் நன்கொடை என்று நஜீப் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை நீதிபதி முற்றிலும் நிராகரித்தார். இந்த நன்கொடை கடிதங்கள் போலியானவை என்றும், அந்த நிதி 1MDB நிறுவனத்திற்குச் சொந்தமானதே தவிர சவுதி அரச குடும்பம் அல்ல என்றும் நீதிபதி தெளிவுபடுத்தினார்.
தலைமறைவாக இருக்கும் ஜோ லோ, நஜீப்பின் 'நிழலாகவே' செயல்பட்டுள்ளார் என்றும், அவர் வழங்கிய உத்தரவுகள் அனைத்தும் நஜீப்பின் நேரடி உத்தரவுகளாகவே 1எம்டிபி அதிகாரிகளால் கருதப்பட்டன என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
நஜீப் ஒன்றும் விவரம் தெரியாத "கிராமத்துப் பையன் " அல்ல என்றும், அவரைச் சுற்றி நடந்த தவறுகளை அவர் அறியவில்லை என்பதை ஏற்க முடியாது என்றும் நீதிபதி மிகக் கடுமையான சொற்களால் சாடினார்.
முன்னதாக, கடந்த திங்கட்கிழமை நஜீப் சிறையிலிருந்து வீட்டுக் காவலுக்குச் செல்ல விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், இன்றைய தீர்ப்பு அவருக்கு மேலும் ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.








