கோலாலம்பூர், ஜனவரி.13-
நாட்டின் பிரபல மலிவு கட்டண விமான நிறுவனமான ஏர்ஏசியா எக்ஸ் (AirAsia X), வரும் ஜனவரி 19, ஆம் தேதி முதல் 'ஏர்ஏசியா' (AirAsia) என அதிகாரப்பூர்வமாக மறுபெயரிடப்பட உள்ளது.
நிறுவனத்தின் அனைத்து விமானச் சேவைகளையும் ஒரே பிராண்டின் கீழ் கொண்டு வருவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏர்ஏசியா ஒரே விமானக் குழுமமாகச் செயல்படும் என்று அதன் இணை நிறுவனர் டான் ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.
Capital A நிறுவனத்திடமிருந்து குறுகிய தூர விமான வணிகத்தை 6.8 பில்லியன் ரிங்கிட் மதிப்பீட்டில் ஏர்ஏசியா எக்ஸ் கையகப்படுத்தும் இறுதிக் கட்டத்தில் உள்ளது.
ஜனவரி 19 ஆம் தேதி முதல் பங்குச் சந்தையில் புதிய பெயரில் இந்நிறுவனத்தின் பங்குகள் வர்த்தகமாகும். இந்த மாற்றத்தின் மூலம் செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்கவும், லாப வரம்பை 30 விழுக்காடு வரை உயர்த்தவும் நிறுவனம் இலக்கு வைத்துள்ளது என்று டான் ஶ்ரீ டோனி குறிப்பிட்டார்.








