முன்னணி சுற்றுலா மலை வாசஸ்தலமான கேமரன்மலையில் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது காணாமல் போன ஓர் இந்தியப் பிரஜையை தேடும் பணி இன்று காலையில் மீண்டும் முடுக்கி விடப்பட்டது.
44 வயது நந்த சுரேஷ் நட்கர்னி என்ற அந்த இந்தியப் பிரஜை கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி கேமரன் மலையில் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டார். அவர் கடந்த ஒரு வார காலமாக காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த இந்தியப் பிரஜை மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்ட கூனோங் ஜாசார் மலைப்பகுதியை இலக்காக கொண்டு தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்கான சிறப்புக்குழுவான SAR (சார்) களம் இறக்கப்பட்டுள்ளது. கேமரன்மலையில் கூனோங் ஜாசார் மலைப்பகுதி, பாரத் தேயிலை தோட்டத்தை நோக்கி செல்லும் கம்பார் பாஸ் ஆகியவற்றை இலக்காக கொண்டு சுமார் 5 கிலோ மீட்டர் பரப்பளவில் தேடும் பணி தீவிரப்படுத்ப்பட்டுள்ளதாக பகாங் மாநில தீயணைப்பு,மீட்புப்படை பொது உறவு அதிகாரி சுல்ஃபாட்லி சகாரியா தெரிவித்துள்ளார்.இந்தியப் பிரஜையை தேடும் பணியில் போலீஸ் கலாட் படையினர், தீயணைப்பு,மீட்பு வீரர்கள், பொது தற்காப்பு படையினர் தன்னார்வாலர்கள் என 70 க்கும் அதிகமானோர் ஈடுபட்டு வருகின்றனர்.








