May 16, 2026
Thisaigal NewsYouTube
மலேசியா-சீனா இளைஞர் திவெட் பயிற்சி 2.0 : மித்ரா ஆதரவில் சீனா பறக்கும் 35 இந்திய மாணவர்கள்; 'ஏஐ' தொழில்நுட்பத்தில் முத்திரை பதிக்கப் போகும் இளம் சிங்கங்கள்!
தற்போதைய செய்திகள்

மலேசியா-சீனா இளைஞர் திவெட் பயிற்சி 2.0 : மித்ரா ஆதரவில் சீனா பறக்கும் 35 இந்திய மாணவர்கள்; 'ஏஐ' தொழில்நுட்பத்தில் முத்திரை பதிக்கப் போகும் இளம் சிங்கங்கள்!

Share:

உலகளாவிய தொழில்நுட்ப அரங்கில் புதியதொரு சகாப்தத்தைப் படைக்கவும், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் இயந்திரவியல் தொழில்நுட்பங்களில் அதிநவீன அறிவைப் பெறவும் மலேசிய இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த 35 முன்னோடி மாணவர்கள் இன்று சீனாவுக்குப் புறப்பட்டனர்.

இது, 2026-ஆம் ஆண்டிற்கான மலேசியா-சீனா இளைஞர் திவெட் பயிற்சி (MCYTT) 2.0 திட்டத்தின் கீழ், நம் நாட்டு இளையோர் சர்வதேச அளவில் தங்களின் முதல் தடம் பதிப்பதைக் குறிக்கும் வரலாற்றுப் பயணமாகும்.

டியூன் ஹோட்டல் கேஎல்ஐஏ ஏரோபோலிஸ் வளாகத்தில் இன்று உணர்ச்சிப்பொங்க நடைபெற்ற விடைபெறும் நிகழ்வை, மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவு (மித்ரா) அமைப்பின் தலைமை இயக்குனர் ரவீந்திரன் நாயர் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

இந்த மாணவர்கள் இன்று மாலை 4.30 மற்றும் 5.40 ஆகிய நேரங்களில் இரண்டு தனித்தனி விமானங்கள் மூலம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து (KLIA 1) தங்களின் கனவுப் பயணத்தை மேற்கொள்கின்றனர்.

மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் மித்ரா அமைப்பின் முழு நிதியுதவியுடன், 2.9 மில்லியன் ரிங்கிட் (2025 நிதி ஒதுக்கீடு) செலவில் இந்த உயர்தர இளைஞர் திறன் மேம்பாட்டுத் திட்டம் மிக உன்னதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை ‘பெலியா மாஹிர்’ அமைப்பு, டாங் அனைத்துலக கல்விக் குழுமத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. மலேசிய இந்திய இளைஞர் மன்றம் (MIYC) இதன் முக்கிய வியூகப் பங்காளியாகத் தோள் கொடுத்துள்ளது.

மித்ரா பெருமிதம்; மின்சார வாகனத் துறையில் சீனா அசுர வளர்ச்சி

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் உணர்வுபூர்வமாக உரையாற்றிய ரவீந்திரன் நாயர், நம் நாட்டு மாணவர்கள் உலக அரங்கில் தங்களின் திறனை நிரூபிக்கப் புறப்படும் இந்த உன்னதக் கட்டத்தைக் கண்டு மித்ரா நிர்வாகம் அளவற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்வதாகக் குறிப்பிட்டார்.

அந்நிய மண்ணில் கால் பதிக்கும் மாணவர்கள் எப்போதும் தங்களின் பாதுகாப்பில் அதீத கவனம் செலுத்த வேண்டும் என்றும், நம் நாட்டின் கலாச்சாரத்தையும் நற்பெயரைக் காக்கும் வகையில் ஒழுக்கத்தோடும் பண்போடும் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் அன்போடு கேட்டுக்கொண்டார்.

"தற்போதைய உலகச் சூழலில், சீனா தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறைகளில் உலக நாடுகளுக்கே முன்னோடியாகத் திகழ்கிறது. குறிப்பாக, அங்கு மின்சார வாகன (EV) தொழில்நுட்பத் துறை அசுர வேகத்தில் புதிய புரட்சியை நோக்கிப் பாய்ந்து வருகிறது.

இந்த அரிய பொன்னான வாய்ப்பை நம் மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்தி, உலகத்தரம் வாய்ந்த பேரறிவையும், விலைமதிப்பற்ற அனுபவத்தையும், பெரும் உத்வேகத்தையும் பெற்றுத் தாயகம் திரும்ப வேண்டும்," என்று அவர் உருக்கமாகக் குறிப்பிட்டார்.

அதோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து இந்திய மாணவர்களும் தங்களின் வாழ்க்கையில் மிக உயர்ந்த சிகரங்களைத் தொட்டு சமூகத்திற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் வாழ்த்தினார்.

907 விண்ணப்பங்கள்; தகுதிக்குக் கிடைத்த அங்கீகாரம்

கடந்த பிப்ரவரி 3 முதல் 28 வரை இந்தத் திட்டத்திற்காகத் திறக்கப்பட்ட பதிவிற்கு, நாடு முழுவதிலும் இருந்து 907 விண்ணப்பங்கள் குவிந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. எனினும், மிகவும் கடுமையான தகுதித் தரநிலைகளின் அடிப்படையில் 500 மாணவர்கள் மட்டுமே இந்த அனைத்துலகப் பயிற்சித் திட்டத்திற்கு இறுதி செய்யப்பட்டுள்ளனர்.

சமூகத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில், பி40 மற்றும் எம்40 வருமானப் பிரிவு குடும்பங்களைச் சேர்ந்த, அரசு மற்றும் தனியார் உயர்கல்வி மற்றும் திறன் பயிற்சி நிறுவனங்களில் (IPTA/S & ILKA/S) பயிலும் தகுதியான தீவிர மாணவர்களுக்கு இந்தத் தேர்வில் முன்னுரிமை வழங்கப்பட்டு, அவர்களின் கல்விக்கனவுக்குச் சிறகுகள் முளைக்கச் செய்யப்பட்டுள்ளது.

அனைத்துலகத் தளமும் எதிர்காலத் தொழில்நுட்பமும்

மலேசிய இளைஞர்களுக்கு அதிநவீன தொழில்நுட்பச் சூழல், சர்வதேச வேலை கலாச்சாரம் மற்றும் உலகளாவிய திறன் பயிற்சிகளை நேரடியாகக் கற்றுக்கொடுக்கும் ஒரு உன்னதப் பாலமாக இந்த MCYTT 2.0 திட்டம் விளங்குகிறது.

தொழில்துறை சார்ந்த இந்தத் தொலைநோக்கு அணுகுமுறையின் மூலம், இன்று புறப்பட்டுள்ள 35 மாணவர்களைத் தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்ட மற்ற மாணவர்களும் அடுத்தடுத்து படிப்படியாகச் சீனாவுக்கு அனுப்பப்படவுள்ளனர்.

அங்கு அவர்கள் செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திரவியல் தொழில்நுட்பம், மின்சார வாகன தொழில்நுட்பம் , தானியக்கமாக்கல், எந்திர மனிதவியல், நவீன தளவாட மேலாண்மை மற்றும் மின்னணுவியல் போன்ற எதிர்கால உலகை ஆளப்போகும் முக்கியத் துறைகளில் நேரடித் தொழிற்பயிற்சி பெறவுள்ளனர்.

இந்நிலையில், இந்தத் திட்டத்தின் வெற்றிகரமான அமலாக்கமானது, உலகத் தகுதியுடன் கூடிய, முற்போக்கான சிந்தனை கொண்ட மலேசிய இந்திய இளைஞர் சமூகத்தை உருவாக்குவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.

"இளைஞர்களுக்கு உதவுவோம், நாட்டைக் காப்போம்" என்ற உன்னதத் தாரக மந்திரத்திற்கு ஏற்ப, நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு இந்த இளைஞர்கள் தங்களின் ஆகச்சிறந்த பங்களிப்பை வழங்குவதை இத்திட்டம் உறுதி செய்யும் எனத் திண்ணமாக நம்பப்படுகிறது.

Related News