குவாந்தான், ஜூலை.26-
குவாந்தான், இஸ்தானா அப்துலாஸிஸ் முன்புறம் நிகழ்ந்த சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு மேன்மை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா உரிய நேரத்தில் உதவிக்கரம் நீட்டி, தமது மனித நேயத்தைப் புலப்படுத்தியுள்ளார்.
விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு சுல்தான் உதவும் காட்சியைக் கொண்ட புகைப்படங்களை, பகாங் சுல்தான் தமது முகநூலில் பகிர்ந்துள்ளார். அரண்மனை முன்புறம் உள்ள பிரதான சாலையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளோட்டி, தூண் ஒன்றில் மோதி கீழே விழுந்து காயங்களுக்கு ஆளாகினார்.
இந்தச் சம்பவத்தை அரண்மனைக்கு வெளியே காரில் செல்லும் போது தற்செயலாகப் பார்த்த பகாங் சுல்தான், உடனே காரை நிறுத்தி விட்டு, அவ்விடத்திற்கு விரைந்தார்.
பாதிக்கப்பட்டவருக்கு உதவியதுடன் அவசர சிகிச்கைக்கான ஏற்பாடுகளைச் செய்தார். பின்னர் அந்த மோட்டார் சைக்கிளோட்டியை மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்வதற்கான ஏற்பாடுகளை சுல்தான் செய்தார்.








