கோலாலம்பூர், பிப்ரவரி.03-
குறைந்த ஊதியப் பின்னணியின் காரணமாக, மலேசியர்களின் நம்பிக்கைக்குரிய ஒரு பாதுகாப்பு நிதியமாகத் திகழ்ந்த ஊழியர் சேமநிதியான ஈபிஎஃப், தற்போது அந்த இடத்தைத் தக்கவைக்க முடியாமல் தள்ளாடுகிறது.
அண்மைய தரவுகளின்படி, ஈபிஎஃப்பில் தீவிரமாகப் பங்களிக்கும் சந்தாதாரர்களில் 74 விழுக்காட்டினர், ஓய்வு பெறும் போது தங்கள் கணக்கில் ஒரு லட்சம் ரிங்கிட்டிற்கும் குறைவான தொகையையே கொண்டுள்ளனர். இந்தத் தொகையானது ஒரு தனிநபருக்கு வெறும் ஐந்து ஆண்டுகளுக்கும் அல்லது ஒரு தம்பதியினருக்கு மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கும் மட்டுமே போதுமானதாக இருக்கும்.
அதாவது, இது ஒரு தனிநபருக்கு மாதம் 1,500 ரிங்கிட் அல்லது ஒரு தம்பதியினருக்கு 2,500 ரிங்கிட் என்ற அளவிலேயே அமையும். இது தற்போது நடைமுறையில் உள்ள குறைந்தபட்ச ஊதியமான 1,700 ரிங்கிட்டை விடவும் குறைவானதாகும்.
மலேசியத் தொழிலாளர்களில் 85 விழுக்காட்டினர் வருமான வரி செலுத்தும் வரம்பிற்குள் வராத அளவுக்கே ஊதியம் பெறுகிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. குறைந்த ஊதியம் காரணமாக, பெரும்பாலான தொழிலாளர்கள் ஈபிஎஃப் போன்ற ஓய்வூதிய நிதியங்களுக்கு வழங்கும் பங்களிப்பும் மிகக் குறைவாகவே உள்ளது.
பலருக்கு, ஓய்வு பெறும் வயதை நெருங்குவது என்பது ஒரு பெரிய பள்ளத்தை எதிர்நோக்குவது போல உள்ளது. தங்களை ஆதரிக்கப் போதுமான பணம் இல்லாத நிலையில், ஓய்வுக் காலம் என்பது மிகக் குறைந்த தரம் வாய்ந்த வாழ்க்கையை அல்லது அடிப்படைத் தேவைகளுக்கே வழியில்லாத சூழலையே ஏற்படுத்தும்.
ஓய்வூதிய வருமானப் போதுமான அளவு நிலையை எட்ட ஒருவருக்கு ஓய்வு பெறும் போது அடிப்படைச் சேமிப்பாக 3 லட்சத்து 90 ஆயிரம் ரிங்கிட் தேவை என்று ஈபிஎஃப் மதிப்பிட்டுள்ளது. ஆனால், இது நிஜத்திற்கும் கற்பனைக்கும் இடையே உள்ள இடைவெளியையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இந்த 3 லட்சத்து 90 ஆயிரம் ரிங்கிட் சேமிப்பைக் கொண்டு 20 ஆண்டு கால ஓய்வுக் காலத்தைக் கணக்கிட்டால், மாதம் சுமார் 1,300 முதல் 1,625 ரிங்கிட் வரை மட்டுமே வருமானம் கிடைக்கும். இதுவும் குறைந்தபட்ச ஊதியத்தை விடக் குறைவானதே. இந்தத் தொகை அடிப்படைத் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்யும் என்றும், வசதியான வாழ்க்கை முறைக்கு இது போதுமானதல்ல என்றும் ஈபிஎஃப் தெரிவித்துள்ளது.








