நாட்டில் கிக் பொருளாதாரத் தொழிலாளர்களுக்கு அடிப்படைப் பாதுகாப்பை வழங்கும் 'கிக் தொழிலாளர்கள் சட்டம் 2025'-க்கு மலேசியத் தொழிற்சங்க காங்கிரஸான MTUC தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இது குறித்து MTUC தலைவர் டத்தோ அப்துல் ஹாலிம் மன்சூர் கூறுகையில், "இந்தச் சட்டம் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதோடு, அவர்களுக்கென ஒரு பிரத்யேக ஆலோசனை மன்றம் மற்றும் தீர்ப்பாயத்தை உருவாக்குகிறது. இதன் மூலம் அவர்கள் தங்களின் குறைகளை சட்டப்பூர்வமாகத் தீர்த்துக் கொள்ள முடியும். மேலும், அவர்கள் தொழிற்சங்கங்களை அமைக்கும் உரிமையும் இதன்கீழ் பறிக்கப்படவில்லை," என்று விளக்கமளித்தார்.
கடந்த மார்ச் 31-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்தச் சட்டத்தின் மூலம், மலேசியாவிலுள்ள சுமார் 16.4 லட்சம் கிக் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார். வெளிப்படையான ஒப்பந்தங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட சமூகப் பாதுகாப்பு போன்ற வசதிகளை இச்சட்டம் உறுதி செய்கிறது.
சில அமைப்புகள் இச்சட்டத்தை தாமதப்படுத்தக் கோரிக்கை விடுத்த போதிலும், தொழிலாளர் நலனில் இது ஒரு மைல்கல் என்று MTUC மற்றும் மனிதவள அமைச்சு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.








