கோலாலம்பூர், ஆகஸ்ட்.19-
பெரிக்காதான் நேஷனல் தலைவர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் அறிவித்துள்ள 12 கட்சிகளை உள்ளடக்கிய எதிர்க்கட்சிக் கூட்டணி, வருகின்ற 16 ஆவது பொதுத் தேர்தலில் ஆளும் கூட்டணிக்கு மிகப் பெரிய சவாலைக் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய ஒரு நெகிழ்வான இந்தக் கூட்டணி, 16 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, நாட்டின் அரசியல் நிலப்பரப்பில் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக பாசீர் கூடாங் பிகேஆர் எம்.பி. ஹசான் அப்துல் கரீம் ஆருடம் கூறியுள்ளார்.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தை ஆதரிக்கும் 18 அரசியல் கட்சிகள், வரும் பொதுத் தேர்தலில், 12 கட்சிகளை உள்ளடக்கிய முகைதீன் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணியை எதிர்கொள்ளும் போது ஒரு நிலையான, அரசியல் சமநிலையை உருவாக்கும் என்று ஹசான் அப்துல் கரீம் நம்பிக்கை தெரிவித்தார்.
பெரிக்காத்தான் நேஷனல் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி, தற்போது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கொண்ட மடானி அரசாங்கத்தின் வலுவான கூட்டணியை எதிர்கொள்ளும் சாத்தியம் உள்ளது.
இந்த இரண்டு மிகப் பெரிய கூட்டணிகளும் 16 ஆவது பொதுத் தேர்தலை நோக்கிச் செல்லும் போது ஓர் அமைதியான சூழ்நிலையை உருவாக்கும் என்று ஹசான் அப்துல் கரீம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பெர்சத்து, பாஸ், பெஜுவாங் மற்றும் புத்ரா போன்ற மலாய்-இஸ்லாமிய கட்சிகள், கெராக்கான் போன்ற சீனர்களைத் தளமாகக் கொண்ட கட்சிகள் மற்றும் எம்ஐபிபி, பிபிபி, இமான் மற்றும் உரிமை உள்ளிட்ட இந்தியக் கட்சிகள் மலேசிய சமூகத்தின் பன்முகத்தன்மையை நிறைவு செய்வதைப் போல் உள்ளது என்று ஹசான் அப்துல் கரீம் குறிப்பிட்டுள்ளார்.








