தெமர்லோ, நவம்பர்.21-
பகாங், ரவூப், புறநகர் பகுதியில் தனது மூதாதையருக்குச் சொந்தமான நிலத்தை மீட்டெடுப்பதில் கடந்த 6 ஆண்டு காலமாகச் சட்டப் போராட்டம் நடத்தி வந்த 94 வயது மூதாட்டி ஏ. சந்திரமதி, தோல்விக் கண்டார்.
அந்த நிலம், தனது மூதாதையருக்குதான் சொந்தம் என்பதைப் போதுமான ஆதாரங்களுடன் நிரூபிப்பதில் மூதாட்டி சந்திரமதி தோல்விக் கண்டுள்ளார் என்று தெமர்லோ உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன் அந்த மூதாட்டியின் விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்தது.
ரவூப் மாவட்ட நில அலுவலகத்தின் பதிவுகள் உண்மை மற்றும் சரியானவை என்று தீர்மானிக்கப்பட்டதாகவும், மூதாட்டி சந்திரமதி அதற்கு நேர்மாறான எந்த ஆதாரத்தையும் கொண்டிருக்கவில்லை என்று நீதிபதி ரொஸ்லான் மாட் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
இதன் தொடர்பில் வழக்கின் பிரதிவாதிகளான ரவூப் மாவட்ட நில அலுவலகத்தின் பதிவதிகாரி, பகாங் மாநில நிலம் மற்றும் கனிம வள இயக்குநர் ஆகியோருக்கு வழக்கு செலவுத் தொகையாக மூதாட்டி சந்திரமதி பத்தாயிரம் ரிங்கிட் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து, புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக மூதாட்டி சந்திரமதியின் வழக்கறிஞர் ஆர். கெங்காதரன் தெரிவித்தார்.
11 பிள்ளைகள், 20 பேரப்பிள்ளைகள் மற்றும் 10 கொள்ளுப் பேரக்குழந்தைகளைக் கொண்ட சந்திரமதி, தனது தாத்தா ரப்பர் தோட்டங்களில் வேலை செய்து கடின உழைப்பின் மூலம் சம்பாதித்தப் பணத்தைப் பயன்படுத்தி அந்த நிலத்தை வாங்கியதாகவும், அது 1970 ஆம் ஆண்டு அறங்காவலராக இருந்த அவரது சகோதரரால் தனக்கு வழங்கப்பட்டதாகவும் சந்திரமதி தனது வழக்கு மனுவில் தெரிவித்துள்ளார்.








