கோலாலம்பூர், ஆகஸ்ட் 25-
கோலாலம்பூர் மாநகரின் முக்கிய வர்த்தகத் தலங்களில் ஒன்றான மஸ்ஜிட் இந்தியாவில் ஓர் இந்தியப் பிரஜையான விஜயலெட்சுமி என்பவர் நடைப்பாதை இடிந்து, பாதாள சாக்கடையில் விழுந்த சம்பவத்தைப் போன்ற துயரச் சம்பவம் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு அந்த வர்த்தகப் பகுதியில் கோலாலம்பூர் மாநகர் மன்றம் விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று Dinamik Sinar Kasih Malaysia சமூக அமைப்பின் தலைவர் டத்தோ N. சிவகுமார் கேட்டுக்கொண்டார்.
ஆத்திராவைச் சேர்ந்த அந்த இந்தியப் பிரஜைக்கு ஏற்பட்ட இந்த துயரச் சம்பவம் உண்மையிலேயே மன வேதனையையும் வருத்தத்தையும் அளிப்பதாக உள்ளது என்று டத்தோ சிவகுமார் குறிப்பிட்டார்.
இது போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கு கோலாலம்பூர் மாநகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக பல ஆண்டு காலமாக விளங்கி வரும் மஸ்ஜிட் இந்தியாவின் பூவியியல் அமைப்பு முறை குறித்து மாநகர் மன்றம் ஓர் ஆய்வை மேற்கொண்டு, அந்த வர்த்தகத்தளத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று டத்தோ சிவகுமார் வலியுறுத்தினார்.
நாட்டின் தலைநகராக விளங்கி வருகின்ற கோலாலம்பூர், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளுக்கும் ஒரு வர்த்தகப் பகுதியாகும்.
விஜயலெட்சுமிக்கு ஏற்பட்ட இந்த துயரச் சம்பவம் மாநகரின் புவியியல் அமைப்பு முறையின் பாதுகாப்பை கேள்வி எழுப்புவதாக உள்ளது.
எனவே கோலாலம்பூர் மாநகர் மன்றம், அந்த முதன்மை வர்த்தகத் தளத்தில் உடனடியாக விரிவான ஆய்வை மேற்கொண்டு, அதன் பாதுகாப்புத்தன்மை குறித்து ஆராயப்பட வேண்டும். இல்லையேல் மக்கள் மத்தியில் ஓர் அச்சம் நிறைந்த பகுதியாகவே அந்த வர்த்தகத் தளம் உருமாறி விடும் என்று டத்தோ சிவகுமார் நினைவுறுத்தினார்.








