கோலாலம்பூர், ஜனவரி.11-
கெடா, கிளந்தான், திரங்கானு மாநிலங்களில் இன்று 2026/2027 புதிய கல்வியாண்டு தொடங்கிய நிலையில், சுமார் 10 லட்சம் மாணவர்கள் புத்தம் புதிய சீருடைகளுடன் தங்கள் பள்ளிகளில் காலடி எடுத்து வைத்தனர். மாணவர் வருகையை உறுதிச் செய்யவும் இடைநிற்றலைத் தவிர்க்கவும் கல்வி அமைச்சு அதிரடித் திட்டங்களை முன்னெடுத்துள்ள வேளையில், 2026-ஆம் ஆண்டிற்கான அதிநவீன புதிய பாலர் பள்ளி பாடத்திட்டம் இன்று முதல் முறையாக அமலுக்கு வந்து ஒரு வரலாற்று மாற்றத்தைத் தொடங்கி வைத்துள்ளது.
இந்த ஆண்டு மாணவர்களின் ஊட்டச்சத்தை உறுதி செய்ய முதல் நாளிலேயே 'RMT துணை உணவுத் திட்டம்' அமல்படுத்தப்பட்டுள்ளதுடன், நெரிசலைத் தவிர்க்க 'K11' போன்ற விரிவுபடுத்தப்பட்ட நவீன பள்ளி வளாகங்கள் அறிமுகமாகி மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இன்று மூன்று மாநிலங்களில் தொடங்கிய இந்த கல்வித் திருவிழாவின் தொடர்ச்சியாக, நாளை ஜோகூர், சிலாங்கூர், கோலாலம்பூர் உள்ளிட்ட இதர மாநிலங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் கோலாகலமாகத் திறக்கப்படவுள்ளன.








