குவா மூசாங், அக்டோபர்.31-
குவா மூசாங், ஃபெல்டா ஆரிங் 8 பகுதியில் உள்ள மரம் வெட்டும் தளத்தில், நேற்று வியாழக்கிழமை யானை தாக்கியதில் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார்.
மரம் வெட்டும் மேற்பார்வையாளரான சைடி ஜஹாரி என்ற 43 வயதான தொழிலாளர், கடுமையான காயங்களுடன் தங்குமிடத்திற்கு அருகே இறந்த நிலையில் காணப்பட்டார்.
6 தொழிலாளர்கள் தங்கியிருந்த அவ்விடத்தில், நேற்று திடீரென யானையின் வாசனையும், சத்தமும் கேட்டதால் அனைவரும் அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குள் தப்பி ஓடியுள்ளனர்.
ஆனால் சைடி ஜஹாரி மட்டும் தப்ப முடியாமல், யானையிடம் சிக்கிக் கொண்டதாக குவா மூசாங் மாவட்ட போலீஸ் தலைவர் சிக் சூன் ஃபூ தெரிவித்துள்ளார்.
சில மணி நேரங்களுக்குப் பின்னர், தப்பியோடிய மற்ற தொழிலாளர்கள் திரும்பி வந்து பார்த்த போது, சைடி ஜஹாரி கடுமையான காயங்களுடன் இறந்த நிலையில் காணப்பட்டதாகவும் சிக் சூன் ஃபூ குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக, குவா மூசாங் தேசிய வனவிலங்கு மற்றும் பூங்காக்கள் துறை, அப்பகுதியில் யானைக் கூட்டத்தின் இயக்கத்தைக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளது.








