கோலாலம்பூர், அக்டோபர்.16-
ஆடவரின் தாக்குதலுக்கு ஆளான பாதுகாவலர் ஒருவர், மருத்துவ சிகிச்சை முடிவடைந்து சில மணி நேரத்தில் மாரடைப்பினால் உயிரிழந்தார். இந்தத் தாக்குதல் சம்பவம் கடந்த திங்கட்கிழமை, அதிகாலை 5 மணியளவில் கோலாலம்பூர் செந்தூல், ஜாலான் ஈப்போவில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியின் பாதுகாவலர் சாவடியில் நிகழ்ந்தது.
மற்ற கட்டடத் தொகுதிக்குச் செல்ல உதவிக் கேட்டு வந்த வாடகைக்குக் குடியிருக்கும் ஆடவருக்கு பணியின் காரணமாக உதவி செய்ய அந்த பாதுகாவலர் மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், பாதுகாவலரைக் கடுமையாகத் தாக்கியதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஹ்மாட் சுகார்னோ முகமட் ஸாஹாய் தெரிவித்தார்.
கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்குச் சென்று சிசிச்சைப் பெற்ற பின்னர் வீடு திரும்பிய அந்த பாதுகாவலர் சில மணி நேரத்தில் உயரிழந்ததாக அவர் குறிப்பிட்டார். இச்சம்பவம் தொடர்பில் 32 வயது ஆடவரைப் போலீசார் அன்றைய தினமே கைது செய்ததாக ஏசிபி அஹ்மாட் சுகார்னோ விளக்கினார்.