ஜோகூர், சிம்பாங் ரெங்காமில் கடந்த ஜூன் மாதம் 5 பேர் உயிரிழந்த சாலை விபத்து தொடர்பில், 19 வயது பல்கலைக்கழக மாணவர் மீது ஆபத்தான மற்றும் கவனக்குறைவான முறையில் வாகனம் ஓட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கோ யின் ஸுன் என்ற அந்த மாணவர், இன்று குளுவாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது, அவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.
கடந்த ஜூன் 1ஆம் தேதி பிற்பகல் 1.19 மணியளவில் ஜாலான் ரெங்காம்-சிம்பாங் ரெங்காம் சாலையின் 27ஆவது கிலோமீட்டரில் மெர்சடிஸ் பென்ஸ் காரை மற்ற சாலைப் பயனாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் ஓட்டியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் அந்த மாணவருக்கு அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 15,000 ரிங்கிட் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
நீதிமன்றம் அவருக்கு 10,000 ரிங்கிட் ஜாமீன், ஒரு நபர் உத்தரவாதத்துடன் பிணை வழங்கியதுடன், மாதம் ஒருமுறை அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவிட்டது. இவ்வழக்கு வரும் நவம்பர் 20ஆம் தேதி மீண்டும் விசாணைக்கு வருகிறது.








