Sep 18, 2026
Thisaigal NewsYouTube
நஜிப் விவகாரம்… ஊழல் ஒழிப்பில் சமரசமே இல்லை! – பிரதமர் அன்வார் திட்டவட்டம்
தற்போதைய செய்திகள்

நஜிப் விவகாரம்… ஊழல் ஒழிப்பில் சமரசமே இல்லை! – பிரதமர் அன்வார் திட்டவட்டம்

Share:

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரஸாக்கிற்கு நிபந்தனையுடன் வீட்டுக் காவல் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஊழல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கையில் எந்தத் தளர்வும் இருக்காது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

நஜிப்புக்கு வீட்டுக் காவல் அனுமதி வழங்கப்பட்டிருப்பது, ஊழல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு எதிரான அரசின் நிலைப்பாடு தளர்ந்துவிட்டது என்றோ, ஊழல் நடைமுறைகளுக்கு அரசாங்கம் அடிபணிந்துவிட்டது என்றோ பொருள்படாது என்று பிரதமர் அன்வார் விளக்கினார்.

நஜிப்புக்கு வழங்கப்பட்டுள்ள நிபந்தனையுடன்கூடிய மன்னிப்பு, அரசாங்கத்தின் சட்ட ஆட்சி கொள்கையை எந்த வகையிலும் பாதிக்காது என்று அவர் கூறினார்.

நஜிப் சம்பந்தப்பட்டு, நிலுவையில் உள்ள வழக்குகள் உட்பட, அனைத்து ஊழல் வழக்குகளும் சட்டத்தின் அடிப்படையில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அன்வார் தெரிவித்தார்.

நாட்டின் அரசியலமைப்பு சட்டங்கள், மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிற்கு வழங்கியுள்ள அதிகாரத்தை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அன்வார் குறிப்பிட்டார்.

நஜிப், வரும் 2028 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை மீதமுள்ள சிறைத் தண்டனைக் காலத்தை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு 50 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்த வேண்டும் என்று கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக இன்று தெரிவிக்கப்பட்டது.

விதிமுறைகளை மீறினால் நிபந்தனையுடனான மன்னிப்பு, ரத்து செய்யப்பட்டு, நஜிப் மீண்டும் சிறையில் மீதமுள்ள தண்டனையை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று நினைவுறுத்தப்பட்டுள்ளது.

Related News